சிங்கப்பூர் சேமிப்புப் பத்திரங்கள் அறிமுகம்

நீண்ட கால சேமிப்புக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் தேவைக்கேற்ற இணக்கமான தேர்வை தனிநபர்களுக்கு வழங்குவதற்காக சிங்கப்பூர் அரசாங்கம் 2015-இல் சிங்கப்பூர் சேமிப்புப் பத்திரங்களை அறிமுகம் செய்தது.

சேமிப்புப் பத்திரங்கள் என்றால் என்ன?

சேமிப்புப் பத்திரங்கள் என்பவை தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஓர் சிறப்பு வகை அரசாங்கப் பத்திரமாகும். இதன் முக்கிய சிறப்பம்சங்கள்:

  • பாதுகாப்பானவை: சேமிப்புப் பத்திரங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்தின் முழுமையான உத்திரவாதத்தைப் பெற்றுள்ளன, இதனால் இது தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு பாதுகாப்பான முதலீடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. கூடுதலாக, முதலீட்டாளர்கள் தங்களுடைய அசல் தொகைக்கு எந்தவிதமான இழப்புகளுமின்றி, தங்களின் தொடக்க முதலீட்டுத் தொகையைத் திரும்பப்பெற முடியும்.
  • நீண்ட-கால முதலீடு: நீங்கள் பத்து வருடங்கள் வரை முதலீடு செய்யலாம், இதற்கான வட்டி காலப்போக்கில் அதிகரிக்கும். நீங்கள் அதிக காலத்திற்குச் சேமித்தால், அதிக இலாபத்தைப் பெறுவீர்கள்.
  • தேவைக்கேற்ற தொகைமீட்புக் காலம்: சேமிப்புக் காலத்தில், எந்த ஒரு மாதத்திலும், எந்தவித அபராதமுமின்றி உங்கள் முதலீடுகளை நீங்கள் மீட்டுக்கொள்ளலாம். உங்களுடைய முதலீட்டுக் காலம் குறித்து நீங்கள் தொடக்கத்திலேயே முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை.

நான் எவ்வாறு வாங்க முடியும்?

நீங்கள் ரொக்கம் அல்லது துணை ஓய்வூதியத் திட்ட (SRS) நிதிகளைப் பயன்படுத்தி சேமிப்புப் பத்திரங்களை வாங்க முடியும்.

  • ரொக்கத்தைப் பயன்படுத்தி சேமிப்புப் பத்திரங்களை வாங்குவதற்கு, உங்களுக்கு DBS/POSB, OCBC அல்லது UOB -இல் ஓர் வங்கிக் கணக்கும், நேரடி வரவு வைத்தல் சேவை (DCS) செயற்படுத்தப்பட்ட ஓர் தனிநபர் CDP கடன்பத்திரங்கள் கணக்கும் இருக்க வேண்டும். அதன் பின்னர் நீங்கள் சேமிப்புப் பத்திரங்களை DBS/POSB, OCBC அல்லது UOB ஏடிஎம்கள் அல்லது இணைய வங்கியியல் அல்லது OCBC-இன் கைப்பேசி செயலி வாயிலாக வாங்க இயலும்.
  • SRS நிதிகளைப் பயன்படுத்தி சேமிப்புப் பத்திரங்களை வாங்குவதற்கு, நீங்கள் SRS ஆப்பரேட்டர்கள் (அதாவது, DBS/POSB, OCBC அல்லது UOB) ஒன்றில் ஒரு SRS கணக்கை வைத்திருக்க வேண்டும். அதன்பின்னர் நீங்கள் சேமிப்புப் பத்திரங்களுக்காக இணைய வங்கியியல், உங்கள் SRS முகவர் வங்கியின் இணையவாசல் வாயிலாக விண்ணப்பிக்க இயலும்.

குறைந்தபட்ச விண்ணப்பத் தொகை $500 ஆகும். மேலும், ஒவ்வொரு தனிநபரும் எந்த ஒரு நேரத்திலும் $200,000 வரை மதிப்புள்ள சேமிப்புப் பத்திரங்களை வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு விண்ணப்ப வேண்டுகோளுக்கும் திரும்ப அளிக்கப்படாத $2 கட்டணம் விதிக்கப்படும்.

சேமிப்புப் பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் மாதத்தின் முதல் வேலை நாளன்று வழங்கப்படும் மற்றும் மாதத்தின் 4வது கடைசி வேலை நாளன்று விண்ணப்பங்கள் வழங்குவது நிறுத்தப்படும்.

மேலதிகத் தகவல்

நிதிப்பொருள் குறித்த உண்மைத்தாளை பதிவிறக்கம் செய்வதற்கு இங்கு சொடுக்கவும்.

எங்களைத் தொடர்புகொள்வதற்கு, உங்கள் விசாரணையை savingsbonds@mas.gov.sg -க்கு மின்னஞ்சல் செய்யுங்கள் அல்லது சேமிப்பு பத்திரம் நேரடித்தொலைபேசி எண் 6221-3682  -ஐ அழைக்கவும்.